இதய நலம்
இதய நலம் பற்றிப் பேசும் போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
நமது உடல் நலமும், மனநலமும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவின் தன்மை மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை அமைந்துள்ளது. எனவேதான் ஆங்கிலத்தில் You are what you eat என்று சொல்வார்கள். அதாவது நீ சாப்பிடும் உணவின் தன்மைத்தான் நீ யார் என்று தீர்மானிக்கிறது என்று பொருள்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைச் சர்க்கரைப் பொருள்கள் புரதம், கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புகள் என பலவகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இனி விளக்கமாகப் பார்க்கலாம்.
கொழுப்புச் சத்து
கொழுப்புச் சத்து என்பது நீரில் கரையும் இயல்புடையது. அதே சமயம் ஆல்கஹால், ஈதல் போன்றவற்றிலும் கரையக் கூடியது.
கொழுப்புச் சத்துகள்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. எனவேதான் கொழுப்புச் சத்தை ஆற்றலின் பெட்டகம் (Store house of energy) என்று சொல்கிறார்கள். ஒரு கிராம் கொழுப்புச் சத்தானது 9 கலோரிகள் வெப்ப ஆற்றலைத் தருகிறது.
நமது ஒரு நாளைக்கான கொழுப்புச் சத்து தேவையானது நம் வயது, உடல் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தினசரி ஒரு தனி மனிதனுக்கான மொத்தக் கலோரிகள் தேவையில் 10 முதல் 15 சதவீதம், கொழுப்புச் சத்துகளில் இருந்து கிடைக்க வேண்டும். தனி மனிதனின் அன்றாட உணவில் கொலஸ்ட்ராலின் அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாகக் கொழுப்புப் பொருள்களை நம் அன்றாட உணவில் சேர்ப்பதால் நமது இதயம் பாதிக்கப்படுவது பற்றியும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாவது பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதன் மூலமாக மூளைக்குப் போகும் ரத்தத்தின் அளவு குறைந்து ஸ்ட்ரோக் (Stroke) போன்ற ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
கொழுப்பு வகை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மூன்று அம்சங்களைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த வகையான கொழுப்பு முதலில் தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும். நாம் சாப்பிடப்போகும் கொழுப்பின் தன்மையைப் பார்க்க வேண்டும். இறுதியாகக நாம் சாப்பிடப் போகும் கொழுப்பின் அளவை கவனிக்க வேண்டும்.
தினசரி உணவில் கொழுப்பு வகை உணவுகளைச் சேர்க்கும்போது, செறிவற்ற கொழுப்பையும், செறிவுற்ற கொழுப்பையும் 2: 1 பங்கு என்ற விகிதத்தில் பயன்படுத்துவது நல்லது.
அன்றாட உணவில் செறிவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், வனஸ்பதி, பாமாயில், முட்டை மஞ்சள் கரு, பால், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது உங்கள் இதய நலனைப் பாதிக்காத வகையில் மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
வனஸ்பதி
தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் அணுக்களைச் செயற்கையாகச் செலுத்தி, அவற்றைச் செயற்கையாக உறையவைத்து உருவாக்கப்படும் கெட்டியான எண்ணெய் வகைதான் வனஸ்பதி. இவ்வாறு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் Trans fat எனப்படும். நம் நாட்டில் இதன் விலை குறைவாக இருப்பதால் சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வனஸ்பதியை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
அண்மையில், வனஸ்பதிக்கும், இதய நோய்க்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்த உணவியல் வல்லுநர்களும், இதய மருத்துவர்களும், செறிவுற்ற கொழுப்பைவிட மிக அதிக அளவில் இதயத் தமனிகளைச் சிதைக்கும் ஆற்றல் வனஸ்பதிக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.
எனவே உலகெங்கும் வனஸ்பதியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்க ஒரு இயக்கத்தையே தொடங்கியுள்ளார்கள். இதய நலத்தைக் காக்க விரும்புபவர்களும், ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களும், அன்றாட உணவில் டிரான்ஸ் கொழுப்பு வகையில் வருகிற வனஸ்பதியைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது இதயத்தக்கு நல்லது.