காதலர் தினம்!
இனம் மதம் மொழி கடந்து
இதயங்கள் இரண்டு
இரண்டறக் கலப்பு.
♥ காதல்♥
"இதயமாக உள்ள உன்னை ஒரு
கவிதையாக வரைய தொடங்கினால்
எத்தனை புத்தகம் வேண்டும் என்று
எனக்கு தெரியாது
காதலின்றி வேறில்லை
பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!
***
ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.
***
உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.
***
சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது
எனக்கான காதல்புன்னகை!
காதல் விதைகள்
ஒரு நாளில் எத்தனை முறை உன்னை நினைக்கிறேன் என்பதை ஒரு நாளில் எத்தனைமுறை சுவாசிக்கிறேன் என்பதைக்கொண்டே கண்டுபிடிக்கிறேன்.
என் கவிதைகளை சுவாசிக்கும் உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.இதழோர புன்னகையையும் எனக்கான நேசத்தையும் தவிர.
காற்றை மொழி பெயர்த்தால் இசை. நேற்றை மொழிபெயர்த்தால் சரித்திரம். நம் காதலை மொழிபெயர்த்தால் நீ,நான்,நாம் மற்றும் வெண்ணிலா.
நீ தந்த பாடல்களில்தான்
அவன் ஒளிந்திருந்தான்.
நீ தந்த கனவுகளில்தான்
அவன் உருப்பெற்றான்.
நீ தந்த முத்தத்தில்தான்
அவன் அனலாகினான்.
நீ தந்த பிரிவில்தான்
அவன் புன்னகைத்தான்.
அந்த புன்னகையில்தான்
நிகழ்ந்தது
எங்கள் மரணமும்.
சிறகில்லாத பறவையின்
வலியை பற்றிய உனது விவரிப்புகளில்
கடைசிவரை இடம்பெறவேயில்லை
வானம்.
நான்.
நாம்.
மற்றும்
முகம் மறைத்து அழும்
சில ப்ரியங்கள்.
உனது தடங்களில் பயணிக்கிறது
நாளை பொழியும்
மழைநீர்.
பிரிதலை சொல்லி அழுகின்றன
நாளைய காகங்கள்.
கடிகாரமுள் தன் பயணத்தை
பின்னோக்கி தொடர்ந்த
கணத்தில்
உனக்கான எனது
காத்திருப்பின் வலி மீது
வந்தமர்கிறது காற்றில்
அலையும் இறகொன்று.
Sunday, February 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment